கர்நாடக சட்டசபை தேர்தல் ஆட்சி அமைக்க தேவையானதை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமித்ஷா
|கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையானதை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பெங்களூருவில் மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
மத்திய மந்திரி அமித்ஷா
இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பா.ஜனதா தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கர்நாடகத்துக்கு தொடர்ந்து வந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கர்நாடகத்துக்கு வந்தார். அவர் பெங்களூருவில் தனியார் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
133 தொகுதிகளில் வெற்றி
பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதித்துவிட்டு ராகுல்காந்தி தான் பாதிக்கப்பட்டவர்போல் நாடகமாடுகிறார். அவர் இவ்வாறு விளையாடவும், நடிக்கவும் கூடாது. அவரது நாடகம் மக்களிடம் எடுபடாது. கர்நாடக சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை பலம் பெற 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். ஆனால் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்தையும் தாண்டி கூடுதலாக 15 முதல் 20 தொகுதிகளில், அதாவது 133 தொகுதிகள் வரை வெற்றிபெறும். கர்நாடக பா.ஜனதாவில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகினாலும், தொண்டர்களின் பலமும், மக்கள் ஆதரவும் அப்படியே உள்ளது.
பா.ஜனதாவில் இருந்து விலகி, பின்னர் கட்சியை எதிர்த்து போட்டியிட்டவர்கள் தேர்தலில் வென்றதாக வரலாறு இல்லை. அந்த உண்மை வரும் தேர்தலிலும் நிரூபிக்கப்படும்.
மன்னிப்பு கேட்க மாட்டேன்
ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்தும், அவர் மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கு குறித்தும் காங்கிரஸ் பேசுகிறது. அதை கையில் வைத்துக் கொண்டு மத்திய பா.ஜனதாவை காங்கிரஸ் எதிர்க்கிறது. இந்த விஷயத்தில் சட்டத்திற்கு மேல் யாரும், எந்த ஒரு குடும்பமும் கிடையாது என்பதையும், சட்டம் தான் அனைவருக்கும் மேலானது என்றும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் ராகுல்காந்தி அரசு பங்களாவை காலி செய்யாமல் இருந்தார். அவருக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு பங்களாவை காலி செய்தார். ஆனால் அவர் உண்மையை மட்டுமே பேசுவதாக கூறுகிறார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் குறித்து அவமரியாதையாக பேசியது பற்றி நாங்கள் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் அவர், மன்னிப்பு கேட்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அவர் முடிவெடுத்துள்ளார்.
ராகுல்காந்திதகுதி நீக்கம்
ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட கூறப்பட்ட சட்டம் காங்கிரசார் கொண்டு வந்தது. அந்த சட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திரும்பபெற முயற்சி மேற்கொண்டார். ஆனால் ராகுல்காந்தி உள்ளிட்டோர் அதை கிழித்தெறிந்தனர். அதனால் தற்போது அவர் பாதிக்கப்பட்ட நபராக நடிக்க கூடாது. நாட்டில் எந்தவொரு குடும்பமும் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று யாரும் நினைக்க கூடாது. நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது அனைவருக்கும் சமம். மன்மோகன்சிங் கொண்டு வந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் ராகுல்காந்தி காப்பாற்றப்பட்டு இருப்பார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் கவர் சத்தியபால் மாலிக், பிரதமர் மோடி குறித்தும், அவரது தலைமையிலான மத்திய அரசு குறித்தும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு சி.பி.ஐ. சார்பில் நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் அதில் உண்மைத்தன்மை இல்லை என்று தெளிவானது. ராகுல்காந்தி விஷயத்தில் பா.ஜனதா மூடிமறைக்க எதுவும் இல்லை.
காங்கிரசின் ஏ.டி.எம்.
பா.ஜனதாவினர் மீது குற்றம் சுமத்துபவர்கள் குறித்து மக்களும், ஊடகத்தினரும் மதிப்பீடு செய்கிறார்கள். பா.ஜனதா மீது கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இது கோர்ட்டு வாயிலாக அவர்கள் எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அல்ல. பா.ஜனதாவினர் மீது காங்கிரசார் குற்றச்சாட்டுகள் அவர்களாலேயே புனையப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்கட்சியின் ஏ.டி.எம். ஆக கர்நாடகம் மாறிவிடும்.
இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரசாரிடம் இருந்து பதில் இல்லை. காங்கிரஸ் தலைமையிலான மத்திய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2009-2014-ம் ஆண்டு காலக்கட்டத்தில் கர்நாடகத்திற்கு மத்திய அரசு சார்பில் ரூ.94,224 கோடி வழங்கப்பட்டது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தான் பதவி ஏற்றது முதல் இதுவரை கர்நாடகத்துக்கு ரூ.2.26 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளார்.
அரசியலமைப்பு சட்டம்
மத்திய அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய வரி பகிர்வு, நிதி உதவி ஆகியவை அனைத்து சேர்த்தால் ரூ.22 ஆயிரம் கோடி மட்டுமே கர்நாடகத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் பிரதமர் மோடி ரூ.75 ஆயிரம் கோடி வழங்கினார். கர்நாடக அரசு இடஒதுக்கீட்டில் விதிமுறைகளை மீறி முஸ்லிம்களுக்கான 4 சதவீத தனி இடஒதுக்கீட்டை பறித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் எந்த ஒரு இட ஒதுக்கீடும் மதம் சார்ந்த அடையாள அடிப்படையில் இருக்க கூடாது என்று தெளிவாக கூறுகிறது.
பா.ஜனதா அரசு முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஒக்கலிகர், லிங்காயத் சமூகத்தினருக்கு பிரித்து வழங்கி இருக்கிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பை காங்கிரஸ் பாதுகாத்தது. ஆனால் சரியாக பராமரிக்கவில்லை. அதனால் தான் அந்த தீவிர இஸ்லாமியை அமைப்பை பிரதமர் மோடி தடை செய்தார்.
பிரதமர் மோடி வலுவடைகிறார்
அந்த அமைப்பின் நிர்வாகிகள் மாநிலத்தில் மக்களை பட்டப்பகலிலேயே கொலை செய்ய பயன்படுத்தப்படுகிறார்கள். அதனால் அந்த அமைப்பை பிரதமர் மோடி தடை செய்து மக்களை பாதுகாக்கிறார். சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஒரு பயங்கரவாத செயல் அரங்கேறியது. இந்த தாக்குதலுக்கு உரிய எதிர் தாக்குதலை நாங்கள் தொடுப்போம். இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மீதான தாக்குதலை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. அது அவர் மீது நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதல் போன்றது.
பிரதமர் மோடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் புதிதல்ல. ஏற்கனவே சோனியா காந்தி பிரதமர் மோடியை 'மவுத் கா சவுதாகார்'(பிறர் வாழ்க்கையோடு விளையாடுபவர்) என்று கூறி விமர்சித்தார். இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வதால் தான் பிரதமர் மோடி இன்னும் வலுவடைகிறார்.
இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.