< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை உத்தரவாத திட்டங்களை நிறுத்த மாட்டோம்; டி.கே.சிவக்குமார் உறுதி
தேசிய செய்திகள்

காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை உத்தரவாத திட்டங்களை நிறுத்த மாட்டோம்; டி.கே.சிவக்குமார் உறுதி

தினத்தந்தி
|
15 Sep 2023 6:45 PM GMT

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை உத்தரவாத திட்டங்களை நிறுத்த மாட்டோம் என்று துணை காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

பத்மநாபநகர்:

பெங்களூரு பத்மநாபநகரில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் துணை மேயர் சீனிவாஸ் உள்பட முன்னாள் கவுன்சிலர்கள் பலர், மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று சேர்ந்தனர். இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும். வேறு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அது எங்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. ஜனதா தளம் (எஸ்) கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசினேன். அவர்கள், குமாரசாமியின் கூட்டணி ஆட்சியை கவிழ்த்த பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பதா? என்று கூறி அதிருப்தி தெரிவித்தனர்.

தேர்தல் முடிவடைந்து 110 நாட்கள் ஆனாலும் எதிர்க்கட்சி தலைவரை இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. இன்று (அதாவது நேற்று) காங்கிரசில் சேர்ந்துள்ளவர்களின் சுயமரியாதையை காப்போம். உங்களுக்கு உரிய பதவிகள் கிடைக்கும். வாரியங்கள், குழுக்கள் உள்ளன. அதனால் யாரும் அவசரப்பட வேண்டாம். கட்சியை வளர்ப்பது கடினமான பணி. பத்மநாபநகரில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆனால் அங்கு காங்கிரஸ் நிர்வாகிகளை ஓரங்கட்டும் பேச்சுக்கே இடமில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தியுள்ள உத்தரவாத திட்டங்களால் பா.ஜனதாவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களின் தலைவர்கள், நமது உத்தரவாத திட்டங்களை பாராட்டுகிறார்கள். பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் கூட கர்நாடக மாதிரி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பெண்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் நோக்கத்தில் உத்தரவாத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை உத்தரவாத திட்டங்களை நிறுத்த மாட்டோம். நான் யாரை பார்த்தும் பயப்பட மாட்டேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

மேலும் செய்திகள்