< Back
தேசிய செய்திகள்
நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் சபதம்
தேசிய செய்திகள்

"நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் சபதம்

தினத்தந்தி
|
23 Dec 2022 4:22 AM IST

நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சபதமிட்டார்.

வாஷிங்டன்,

போருக்கு மத்தியில் அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம் என்று சபதமிட்டார்.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 300 நாட்களைக்கடந்து சென்று கொண்டிருப்பதால் அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றது, உலகளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

அவர் போலந்து நாட்டின் ரெஸ்சோவ் நகரில் இருந்து அமெரிக்காவின் போர் விமானத்தில்தான் அங்கு சென்றார். அங்கு அவருக்கு ஒரு மாபெரும் ஹீரோவுக்குரிய வரவேற்பு அளிக்கப்பட்டது

ஜோ பைடனுடன் சந்திப்பு

வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் உக்ரைனிய ராணுவ பதக்கத்தை ஜோ பைடனிடம் வழங்கினார். ஜெலன்ஸ்கிக்கு ஜோ பைடன் 2 கட்டளை நாணயங்களை வழங்கினார்.

இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன், "இந்த பயங்கரமான நெருக்கடியில் உங்கள் தலைமை, நீங்கள் செய்திருக்கும் செயல்கள் உக்ரைன் மக்களையும், அமெரிக்க ஜனாதிபதியையும், அமெரிக்க மக்களையும், ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது" என புகழாரம் சூட்டினார். உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த பெரும் உதவிகளுக்கு தான் நன்றி கூறத்தான் அமெரிக்கா வந்துள்ளதாக ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஜெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணத்தையொட்டி, உக்ரைனுக்கு 1.85 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15 ஆயிரத்து 306 கோடி) பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பேச்சு

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசுவதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அவருக்கு அமெரிக்க தேசியக்கொடியை வழங்கினார்.

இந்த கூட்டுக்கூட்டத்தில் ஜெலன்ஸ்கி பேசும்போது கூறியதாவது:-

எங்களுக்கு அமைதி வேண்டும். இதற்கான 10 அம்ச திட்டத்தை வழங்கி உள்ளேன். அதுபற்றி ஜனாதிபதி ஜோ பைடனிடம் விவாதித்தேன். இது இன்னும் பல பத்தாண்டுகளுக்கு கூட்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை தரும் என நம்புகிறேன்.

உக்ரைனியர்களாகிய நாங்கள் சுதந்திர போரை கடந்து செல்வோம். நாங்கள் கண்ணியத்துடன், வெற்றிகரமாக சுதந்திரத்தை அடைவோம். நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். எங்கள் நாட்டில் மின்சாரம் இல்லை என்றாலும், எங்களில் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தீபத்தை அணைத்து விட முடியாது.

'சரண் அடைய மாட்டோம்'

ரஷியா எங்கள் மீது ஏவுகணைகளால் தாக்கினால், நாங்கள் எங்களைக் காக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம். அவர்கள் எங்களை ஈரான் டிரோன்களால் தாக்கினால், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது எங்கள் மக்கள் வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடத்துக்கு செல்வார்கள்.

எங்கள் போர், உயிருக்கானது மட்டுமல்ல. எங்கள் போர், சுதந்திரத்துக்கானது, உக்ரைன் மக்களின் பாதுகாப்புக்கானது.

இந்த போர், என்னவிதமான உலகத்தில் எங்கள் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் வசிக்கப்போகின்றன என்பதை வரையறை செய்யும்.

உக்ரைன் உயிருடன்தான் இருக்கிறது. நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம். நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவி, தொண்டு அல்ல. இது எதிர்கால பாதுகாப்புக்கான முதலீடு ஆகும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்