< Back
தேசிய செய்திகள்
ராகுல்காந்தியின் யாத்திரையில் மம்தா பானர்ஜி ஒரு 15 நிமிடங்களாவது பங்கேற்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை
தேசிய செய்திகள்

ராகுல்காந்தியின் யாத்திரையில் மம்தா பானர்ஜி ஒரு 15 நிமிடங்களாவது பங்கேற்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை

தினத்தந்தி
|
25 Jan 2024 4:59 PM IST

பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

சிலிகுரி,

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ம் தேதியன்று தொடங்கிய இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நடைபயணமானது மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது.

ராகுல்காந்தியின் யாத்திரையானது நாகாலாந்து, அசாமை கடந்து தற்போது மேற்கு வங்காளத்தில் நுழைந்துள்ளது.

இந்தநிலையில், ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

திரிணமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியின் முக்கிய தூணாக உள்ளது. மம்தா பானர்ஜி, நாட்டின் துணிச்சல் மற்றும் அனுபவம் மிக்க தலைவர் ஆவார்.

மம்தா பானர்ஜி பாஜகவை தோற்கடிக்க விரும்புகிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நாங்களும் பாஜகவை தோற்கடிக்க விரும்புகிறோம். நாம் இணைந்தே போரிடுவோம். "இந்தியா" கூட்டணியை வெற்றி பெறச் செய்வது நமது கடமை.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள வேண்டும் என்று சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அனைவரும் விரும்புகின்றனர். மம்தா பானர்ஜிக்கு இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு 15 நிமிடங்களாவது இந்த நடைப்பயணத்தில் மம்தா கலந்துகொள்ள வேண்டும். அவர் பங்கேற்றால் அது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்