< Back
தேசிய செய்திகள்
மேகதாது, காவிரி விவகாரம் குறித்து மத்திய மந்திரியிடம் பேசினோம் - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
தேசிய செய்திகள்

மேகதாது, காவிரி விவகாரம் குறித்து மத்திய மந்திரியிடம் பேசினோம் - அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தினத்தந்தி
|
25 July 2024 5:56 PM IST

காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டிலை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அமைச்சர் துரை முருகன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கர்நாடகாவில் தற்போது மழை பெய்து வருவதால் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை நிலுவை பாக்கி இல்லாமல் கர்நாடக அரசு தந்துள்ளது. இந்த மாதம் இறுதிவரை தண்ணீர் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 45 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு தடையாக இருப்பதால் மத்திய அரசு அதில் தலையிட வேண்டும். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டிலை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

புதிய அமைச்சரவை பதவியேற்றபின், துறை சார்ந்த மந்திரியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். மேகதாது, காவிரி விவகாரம் குறித்து மத்திய மந்திரியிடம் தெளிவாக பேசினோம். காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்தும் மத்திய மந்திரியிடம் பேசியுள்ளோம்.

மத்திய மந்திரி கோரிக்கைகளை கேட்டுவிட்டு நிறைய விஷயங்கள் பேசினார். அவர் இந்தியில் பதிலளித்ததால் அவர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒருபோதும் கர்நாடகா காவிரி நீரை திறந்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்