நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம்; ஆனால்.. மாலத்தீவு அதிபர் கொந்தளிப்பு
|சீனாவுக்கு ஐந்து நாள் சுறுப்பயணம் மேற்கொண்டு இருந்த மாலத்தீவு அதிபர் நாடு திரும்பியதும் இந்தியாவை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
மாலே,
பிரதமர் மோடி கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் செய்தார். அங்குள்ள கடற்கரையில் நடைபயிற்சி செய்தார். உரிய உபகரணங்களுடன், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும், ''சாகசத்தை விரும்புபவர்களுக்கு லட்சத்தீவுதான் சரியான தேர்வு'' என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே, அண்டை நாடான மாலத்தீவின் அரசியல்வாதிகள் சிலர் பிரதமர் மோடியை இனரீதியாக, இழிவான வார்த்தைகளால் சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சித்தனர். அவர்களில் 3 மந்திரிகளும் அடங்குவர். 'சுற்றுலாவை பொறுத்தவரை, மாலத்தீவுடன் இந்தியா போட்டியிட முடியாது. மாலத்தீவில் உள்ள வசதிகளை இந்தியாவால் அளிக்க முடியாது'' என்ற அர்த்தத்தில் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள இந்திய தூதரகம், இப்பிரச்சினையை மாலத்தீவு அரசின் கவனத்துக்கு எடுத்து சென்றது. பிரதமருக்கு எதிரான கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம், அரசுக்கும், அந்த கருத்துகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவுபடுத்தியது. இந்த விவகாரத்தால் இந்தியா- மாலத்தீவு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சீன பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவை மறைமுகமாக தாக்கி உள்ளார். இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் கூறுகையில்"நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால் அது எங்களை கொடுமைபடுத்தும் உரிமத்தை வழங்கியது ஆகாது" என்று காட்டமாக பேசியுள்ளார்.