சீனாவின் ஊடுறுவல்களை தடுத்துள்ளோம் - மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி
|காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்புடன் பேச வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். அவர் இதுபோன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறேன் என்று அவருக்கு தெரியவில்லை. நமது நாட்டின் எல்லைகளை நாங்கள் பலப்படுத்தி வருகிறோம்.
சீனாவின் ஊடுறுவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்தது. 1962-ம் ஆண்டு சீனா நமது நாட்டின் எல்லையில் 34 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது. அப்போது இதை ஏன் தடுக்கவில்லை. நாங்கள் நாட்டை நாசப்படுத்தவில்லை. நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்துகிறோம். அதே போல் காங்கிரஸ் கட்சியை அவர்கள் பலப்படுத்தி கொள்ளட்டும். அதை விடுத்து பா.ஜனதா மீது குறை கூறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.