< Back
தேசிய செய்திகள்
அத்வானி முதல் ஷாருக் கான் வரை கிறிஸ்தவ பள்ளிகளில் படித்து உள்ளனர்; ஆனால் எங்களுக்கு மரியாதை இல்லை:  மத்திய மந்திரி வேதனை
தேசிய செய்திகள்

அத்வானி முதல் ஷாருக் கான் வரை கிறிஸ்தவ பள்ளிகளில் படித்து உள்ளனர்; ஆனால் எங்களுக்கு மரியாதை இல்லை: மத்திய மந்திரி வேதனை

தினத்தந்தி
|
21 Jan 2023 4:01 PM IST

மகாத்மா காந்தி முதல் ஷாருக் கான் வரை கிறிஸ்தவ பள்ளிகளில் படித்து உள்ளனர் என மத்திய மந்திரி ஜான் பர்லா கூறியுள்ளார்.



கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நடந்த அமைதி பேரணி ஒன்றில் மத்திய மந்திரி மற்றும் அலிப்பூர்துவார் தொகுதியின் எம்.பி.யான ஜான் பர்லா கலந்து கொண்டார்.

அவர் பேரணியில் பேசும்போது, எங்களுக்கு அமைதியை தவிர வேறு எதுவும் தேவையில்லை. ஒன்றிணைவதற்கான தருணம் வந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.

சத்தீஷ்காரில் நடந்தது போன்ற அநீதியை எங்களது (கிறிஸ்தவ) உறுப்பினர்கள் எதிர்கொள்ள கூடாது. சத்தீஷ்காரின் நாராயண்பூர் நகரில் மதமாற்றம் நடக்கிறது என கூறி பழங்குடியினர் போராட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

கிறிஸ்தவ ஆலயம் ஒன்றை சூறையாடினர். ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். கல்வி மற்றும் ஏழை மக்களுக்கான துறையில் நாங்கள் நிறைய பங்காற்றி உள்ளோம். நாடு முழுவதும் கிறிஸ்தவ பள்ளிகள் காணப்படுகின்றன.

அரசு பள்ளிகள் இல்லாத நாட்டின் தொலைதூர பகுதியில் கூட கிறிஸ்தவ பள்ளிகள் உள்ளன. விடுதலை போராட்ட வீரர்களான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மகாத்மா காந்தி முதல் அரசியல்வாதிகளான எல்.கே. அத்வானி, அருண் ஜெட்லி, ஸ்மிரிதி இரானி, ஜே.பி. நட்டா, பவார் குடும்பத்தினர் மற்றும் திரைப்பட நடிகர் ஷாருக் கான் வரை அனைவரும் கிறிஸ்தவ பள்ளிகளில் படித்து உள்ளனர்.

இந்த பள்ளிகள் தவிர, மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற வசதிகள் கொண்ட மையங்களை, தங்களது நிதி கொண்டு கிறிஸ்தவர்கள் நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் நிறைய பங்காற்றியும் மரியாதை இல்லை. சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் நாங்கள் பங்காற்றியதற்காக என்ன மரியாதை எங்களுக்கு கிடைத்து உள்ளது?

நாட்டுக்கு நாங்கள் ஆற்றிய பங்கை பற்றி உலகிற்கு எடுத்து கூறவில்லை எனில், இன்னும் எங்கள் மீது அடி விழும் என்று கூறியுள்ளார். நாங்கள் மதமாற்றம் செய்கிறோம் என்று ஏன் குற்றச்சாட்டுகள் எழுகின்றன? நாங்கள் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை என்று மந்திரி ஜான் பர்லா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்