மீட்பு நிறைவடைந்துவிட்டது... பொருளாதார மீட்பு பற்றி இனி பேச வேண்டியதில்லை - தலைமை பொருளாதார ஆலோசகர்
|கொரோனா தொற்றில் இருந்து பொருளாதார மீட்பு பற்றி நாம் இனி பேசவேண்டியதில்லை என்று இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
டெல்லி,
2023-ம் ஆண்டு உலக பொருளாதாரம் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பான கணிப்பை சர்வதேச நாணய நிதியம் இன்று அறிக்கை வெளியிடுள்ளது.
2022-23 நிதியாண்டில் 6.8 சதவிகிதமாக இருக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023-24 நிதியாண்டில் 6.1 சதவிகிதமாக சரிந்து வெளிநாடுகளின் எதிர்க்காற்று இருந்தபோதும் வலிமையான உள்நாட்டு தேவையால் 2024-25 ஆண்டு நிதியாண்டில் மீண்டும் 6.8 சதவிகித வளர்ச்சியை எட்டும்' என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
இதனிடையே, 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் 2022-23 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த ஆய்வறிக்கையில், 2021-22 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவிகிதமாகவும், 2022-23 நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.0 சதவிகிதமாக உள்ளது. 2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும். உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஷ்வரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, உலக பொருளாதார கணிப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாகவும், அடுத்த நிதியாண்டில் 6.1 சதவிகிதமாகவும், 2024-25 நிதியாண்டில் 6.8 சதவிகிதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.
நாட்டின் பொருளாதார மீட்பு நிறைவடைந்துவிட்டது. வங்கி சாரா மற்றும் கார்ப்பரேட் துறைகள் தற்போது ஆரோக்கியமான நிதி நிலை அறிக்கைகளை கொண்டுள்ளன. இதன் மூலம், கொரோனா தொற்றில் இருந்து மீள்வது குறித்து இனி நாம் பேசவேண்டியதில்லை. பொருளாதாரத்தின் அடுத்தகட்டம் குறித்து நாம் பார்க்க வேண்டும்' என்றார்.