< Back
தேசிய செய்திகள்
விவசாயிகள் போராடும் முறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை - அரியானா முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

'விவசாயிகள் போராடும் முறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை' - அரியானா முதல்-மந்திரி

தினத்தந்தி
|
15 Feb 2024 4:26 PM IST

விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்வதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

சண்டிகர்,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில் விவசாயிகள் போராடும் முறையில் அரசுக்கு உடன்பாடு இல்லை என அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ரெயில்கள், பேருந்துகள் அல்லது அவர்களின் சொந்த வாகனங்களில் கூட அவர்கள் செல்லலாம். ஆனால் டிராக்டர் என்பது போக்குவரத்து வாகனம் அல்ல. இது ஒரு விவசாயக் கருவி.

நாட்டின் தலைநகருக்குச் செல்ல அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. ஆனால் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும்? போராட்டத்தின் நோக்கம் என்ன? இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். விவசாயிகள் போராடும் முறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

முன்பு விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, சுமார் ஒரு வருடம் திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் அவர்கள் முகாமிட்டதால் பலருக்கு சிரமம் ஏற்பட்டது. தற்போது கூட தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவதை நாம் காண முடிகிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்