'இளைஞர்களை கோவில்களுக்கு வரவழைக்க இதை செய்யலாம்...' - இஸ்ரோ தலைவர் சோம்நாத் யோசனை
|இளைஞர்களை ஈர்க்கும் வகையில் கோவில் நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உதியனூர் தேவி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஜெயக்குமார் மற்றும் வி.கே.பிரசன்னா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிலையில் விருதை பெற்ற பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது;-
"இந்த விருது வழங்கும் விழாவிற்கு அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இங்கு வந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. இளைஞர்களை ஈர்க்கும் வகையில் கோவில் நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். இளைஞர்களுக்காக கோவில்களில் நூலகங்கள் அமைக்கலாமே?
அத்தகைய முயற்சியின் மூலம் இளைஞர்கள் கோவில்களுக்கு வந்து படிக்கவும், பல்வேறு விவாதங்களை நடத்தவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். கோவில் நிர்வாகங்கள் இந்த திசையில் செயல்பட்டால் பெரிய மாற்றங்கள் ஏற்படும்."
இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார்.