'இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் வல்லரசு நாடாக்க உழைத்து வருகிறோம்' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக 4 டிரில்லியன் டாலர்களை நெருங்கி வருகிறது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மாஸ்கோ,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷியா சென்றுள்ளார். முன்னதாக ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசிய ஜெய்சங்கர், இந்தியா-ரஷியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 5 பில்லியன் டாலர்களை கடந்திருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியை ரஷியாவிற்கு வருகை தருமாறு புதின் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக 4 டிரில்லியன் டாலர்களை நெருங்கி வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை ஒரு வெற்றிகரமான, வல்லரசு நாடாக மாற்றுவதற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். வல்லரசு நாடு என்றால் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாடு குறித்த உணர்வும், பெருமிதமும் கொண்ட நாடாக இந்தியா விளங்கும்."
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.