< Back
தேசிய செய்திகள்
பாலாசாகேப்பின் எண்ணங்களின் வாரிசுகள் நாங்கள் - ஏக்நாத் ஷிண்டே டுவிட்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பாலாசாகேப்பின் எண்ணங்களின் வாரிசுகள் நாங்கள் - ஏக்நாத் ஷிண்டே டுவிட்

தினத்தந்தி
|
10 Oct 2022 11:35 PM IST

பாலாசாகேப்பின் எண்ணங்களின் வாரிசுகள் நாங்கள் என்று மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது. மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதில் அவர்கள் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்ப்பித்தது. இந்த சூழலில் ஷிண்டே அணியினர் கோரிய 3 சின்னங்களையும் தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்தது. மேலும் நாளை புதிய சின்னங்களின் பட்டியலை அளிக்கும்படி கோரி உள்ளது.

இந்நிலையில் சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் வலுவான இந்துத்துவா கருத்துகளுக்கு கிடைத்த வெற்றி என்று மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "இறுதியாக, பாலாசாகேப் தாக்கரேவின் வலுவான இந்துத்துவவாதி சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி. பாலாசாகேப்பின் எண்ணங்களின் வாரிசுகள் நாங்கள்" என்று அதில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று சிவசேனாவின் ஷிண்டே அணிக்கு 'பாலாசாஹேபஞ்சி சிவசேனா' என்ற பெயரை ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்