'தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம்' - ராகுல் காந்தி
|தொகுதி பங்கீடு விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
கொல்கத்தா,
2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி, மேற்கு வங்கத்தில் தங்களது கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள அணியினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அப்போது அவரிடம், "மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியைக் கூட விட்டுக்கொடுக்க முன்வராத திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சி ஏன் முக்கியத்துவம் அளிக்கிறது?" என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "எங்கள் கட்சியும், மம்தா பானர்ஜியின் கட்சியும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறவில்லை. இரு தரப்பில் இருந்தும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்" என்று தெரிவித்தார்.