< Back
தேசிய செய்திகள்
இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம்:  இந்திய வெளியுறவுத்துறை கருத்து
தேசிய செய்திகள்

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம்: இந்திய வெளியுறவுத்துறை கருத்து

தினத்தந்தி
|
14 April 2024 8:50 AM IST

இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேல் மீது ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது.

இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என அச்சம் ஏற்பட்டதால் மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை தங்கள் நாட்டு மக்களுக்கு விடுத்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் கூறியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் - ஈரான் இடையே முழு அளவிலான போர் எந்த நிமிடமும் வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, இஸ்ரேல்- ஈரான் மோதல் விவகாரம் தொடர்பாக இந்தியா தனது கருத்தை கூறியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்கு திரும்ப வேண்டும்" என்று கூறியுள்ளது.

மேலும் செய்திகள்