< Back
தேசிய செய்திகள்
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல - டி.கே.சிவக்குமார் காட்டம்
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல - டி.கே.சிவக்குமார் காட்டம்

தினத்தந்தி
|
11 March 2024 3:51 PM IST

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதாக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக விவசாயிகள் மற்றும் ரைதா ஹிதாராக்ஷனா சமிதி அமைப்புகள் போராட்டம் நடத்தின. மேலும், தமிழ்நாட்டில் கூட்டணி கட்சியான தி.மு.க.,வின் நலன்களைப் பாதுகாக்க கர்நாடகா காங்கிரஸ் அரசு ஆர்வமாக இருப்பதாக அம்மாநில பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, மாளவல்லியில் உள்ள ஷிவா நீர்த்தேக்கத்தை நிரப்புவதற்காக கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதாகவும், அங்கிருந்து பெங்களூருக்கு குடிநீர் தேவைக்கு நீர் கொண்டுசெல்லப்படுவதாகவும் அம்மாநில துணை முதல்-மந்திரியும், நீர்வளத் துறை மந்திரியான டி.கே.சிவகுமார் விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேஆர்எஸ் அணையிலிருந்து பெங்களூருக்கு தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்துக்கு அல்ல. என்ன ஆனாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது.

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளன. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல. பெங்களூருவுக்கு தண்ணீர் பம்ப் செய்யும் இடத்தில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. தண்ணீர் பம்ப் செய்யப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் நீர் இருக்க வேண்டும். இதனால் அந்த அளவை பராமரிக்க தண்ணீர் விடுவிக்கப்பட்டது. பெங்களூரின் தண்ணீருக்காக, நீர் திறக்கப்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்