அடுத்த 13-14 நாட்களை நாங்கள் உற்சாகமாக பார்க்கிறோம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
|சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்தார்.
கேரளா,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 3-வது நிலவு பயணமான 'சந்திரயான்-3' நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனைத்தொடர்ந்து சூரியன் ஆய்வுப்பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.
'ஆதித்யா-எல்1' சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய பணியாகும். 'ஆதித்யா' என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியான 'லெக்ரேஞ்சியன் பாயிண்ட்-1'-ஐ மையமாக கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதால், இஸ்ரோ இந்த திட்டத்துக்கு 'ஆதித்யா- எல்1' என்று பெயரிட்டு உள்ளது. 'ஆதித்யா- எல்1' லெக்ரேஞ்சியன் புள்ளி 1-ல் இருந்து சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்யும்.
இந்த விண்கலம் 7 கருவிகளுடன் (பேலோடுகள்) பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த 13-14 நாட்களில் பெரும்பாலான அறிவியல் நோக்கங்கள் நிறைவேறப் போகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், "சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்... பெரும்பாலான அறிவியல் நோக்கங்கள் நிறைவேறப் போகிறது.. அனைத்து அறிவியல் தரவுகளும் பார்க்கப்படுகின்றன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் வரும் 14 நாட்களில் நிலவில் இருந்து நிறைய தரவுகளை அளப்போம். அப்படி செய்யும் போது அறிவியலில் ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நம்புகிறோம். எனவே அடுத்த 13-14 நாட்களை நாங்கள் உற்சாகமாக பார்க்கிறோம்" என்று அவர் கூறினார்.