< Back
தேசிய செய்திகள்
நாங்கள் அப்பாவிகள் ஏனெனில் இந்துக்கள்... பில்கிஸ் பானு வீட்டின் முன் பட்டாசு கடை போட்ட குற்றவாளிகள்
தேசிய செய்திகள்

நாங்கள் அப்பாவிகள் ஏனெனில் இந்துக்கள்... பில்கிஸ் பானு வீட்டின் முன் பட்டாசு கடை போட்ட குற்றவாளிகள்

தினத்தந்தி
|
23 Oct 2022 1:18 PM IST

குஜராத்தில் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு வீட்டின் முன் குற்றவாளிகள் பட்டாசு கடை போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.



தகோத்,


குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இந்நிலையில், குஜராத்தின் தகோத் நகரில் ரந்திக்பூர் கிராமத்தில் பில்கிஸ் பானு வீட்டின் முன்னால் சாலைக்கு எதிரே பட்டாசு கடை ஒன்று போடப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

இந்த கடையானது, பில்கிஸ் பானு பலாத்காரம் மற்றும் பானுவின் குடும்பத்தினர் படுகொலையில் குற்றவாளியாக கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட ராதேஷ்யாம் ஷா என்பவருடையது. பயத்தினால், பானு கிராமத்தில் வசிக்காமல் வேறு இடத்திற்கு சென்று விட்டார்.

அவரது வீட்டை, வேறொரு இந்து பெண்ணுக்கு வாடகைக்கு விட்டு உள்ளார். அந்த பெண் வீட்டில் துணி விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். குற்றவாளிகள் அனைவரும் கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளனர். மக்கள் இதனால், அச்சத்தில் உள்ளனர்.

இதுபற்றி குற்றவாளிகளில் ஒருவரான கோவிந்த் நயி என்பவர் கூறும்போது, நாங்கள் அப்பாவிகள். எங்கேயாவது மாமாவும், மருமகனும் ஒருவர் முன்னால் மற்றொருவர், யாரையாவது பலாத்காரத்தில் ஈடுபடும் செயலை நீங்கள் பார்த்துள்ளீர்களா? இந்து சமூகத்தில் இப்படி நடக்குமா? இல்லை, இந்துக்கள் அப்படி செய்வதில்லை என கூறியுள்ளார்.

இந்த வழக்கில், கோவிந்த் மற்றும் சிலர் 3 ஆண்டுகள் வரை பரோலில் வெளியே இருந்துள்ளனர். அவர்களது நன்னடத்தைக்காக சிறையில் இருந்து முன்பே விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

டெல்லி செங்கோட்டையில் பெண்களின் மதிப்புகளை பற்றி பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றியபோது, அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். பரோலில் இருந்த காலத்தில், இந்த நபர்கள் சாட்சிகளை மிரட்டிய சம்பவங்களும் நடந்து உள்ளன.

அவற்றில், கோவிந்த்துக்கு எதிராக சாட்சி கூறிய 2 பேரை கோவிந்த் மிரட்டி உள்ளார். இதுபற்றி கேட்க சென்ற செய்தியாளர்களையும், கிராமத்தில் இருந்து தொலைந்து போங்கள் என கூறியுள்ளார். கோவிந்தின் தந்தையும் அவருடன் குடும்பத்தில் ஒன்றாக வசிக்கிறார். ஆனால், அதுபற்றி பேச அவரும் மறுத்து உள்ளார்.

பரோலில் வந்த ராதேஷியாம் ஷா மற்றும் மற்றொரு குற்றவாளி இருவரும் மற்றும் ஷாவின் சகோதரர் ஆஷிஷ் ஷா அகியோர் மீது பெண்ணை தாக்கியதற்காக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இது அடிப்படையற்றது என கூறி ஆஷிஷ் தொடர்ந்து பேசாமல் சென்று விட்டார்.

வழக்கில் மற்றொரு குற்றவாளியான ராஜூபாய் சோனி நகை கடையை வைத்து நடத்தி வருகிறார். செய்தியாளர்களை பார்த்ததும் அவர் நகர்ந்து சென்று விட்டார்.

மேலும் செய்திகள்