எங்கள் இதயங்களை கேரள மக்களிடமே விட்டுச் செல்கிறோம்: ராணுவம் நெகிழ்ச்சி
|மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினரைத் திருப்பி அனுப்ப கேரளா அரசு முடிவு செய்தது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.
வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து இந்திய ராணுவம், துணை ராணுவ படைகள், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டோர் மீட்பு-தேடுதல் பணியில் கடந்த ஒன்பது நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினரைத் திருப்பிஅனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாக பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் நேற்று அறிவித்தார். ராணுவ அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கியும் மந்திரி ரியாஸ் கவுரவித்தார்.
இதையடுத்து ராணுவ வீரர் ஒருவர் பேசும் போது கூறியதாவது: '' நாங்கள் இங்கிருந்து சென்றாலும் எங்கள் இதயங்களை கேரள மக்கள் குறிப்பாக வயநாடு, மேப்பாடி மக்களிடமே விட்டுச் செல்கிறோம். மந்திரிகள், உள்ளூர் நிர்வாகிகள், காவல்துறையினர் அவசர உதவி சேவை பிரிவினர் மற்றும் பொது மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்'' என உருக்கமாக பேசினார்.