வயநாட்டில் யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு 15 லட்சம் வழங்க கர்நாடக அரசு முடிவு: பா.ஜ.க கடும் எதிர்ப்பு
|வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூர்,
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 10-ந் தேதி யானை தாக்கியதில் அஜீஸ் என்பவர் உயிரிழந்தார். அந்த யானைக்கு கர்நாடக வனத்துறையால் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து கேரள மக்கள் பிரதிநிதிகள், யானை தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பரிசீலிப்பதாக கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் கர்நாடக யானை தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதற்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வயநாடு ராகுல் காந்தியின் தொகுதி என்பதால், கேரள நபரின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு நிவாரணம் வழங்கியுள்ளதாக பா.ஜனதா தலைவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தியின் தொகுதியில் யானை தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக கர்நாடக அரசு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. யானை கர்நாடகத்தை சேர்ந்தது என்று தவறாக சொல்லி ஏமாற்றுகிறார்கள். கடும் வறட்சியால் கர்நாடக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தியை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் இந்த நிவாரணத்தை வழங்கியது வெட்கக்கேடானது" என விமர்சித்துள்ளார்.