'இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்; நாடாளுமன்ற தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன்' - சசி தரூர்
|இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக, நாடாளுமன்ற தேர்தலில் இனி போட்டியிடப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதையடுத்து 4-வது முறையாக திருவனந்தபுரம் தொகுதியில், மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 16 ஆயிரத்து 77 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சசி தரூர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
"நாடாளுமன்றத்தில் இதுவரை என்னால் முடிந்த அளவுக்கு பணியை சிறப்பாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். அதுபோல் எனது தொகுதிக்கும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். அதை தொடர்ந்து செய்வேன்.
5 ஆண்டுகளுக்கு பிறகோ அல்லது 5 ஆண்டுகளுக்குள்ளாகவோ நாடாளுமன்ற தேர்தல் வந்தால் அதில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். ஆனால் இந்த 5 ஆண்டுகள் மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்வேன். அதன் பிறகும் எனது மக்கள் பணி தொடரும். அதை தேர்தல் அரசியல் இல்லாமலேயே செய்யமுடியும்.
இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதை நேர்மையாக உணர்கிறேன். அப்போதுதான் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச முடியும். திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதன் மூலம் கேரளாவில் பா.ஜனதா கால் பதித்துள்ளது. கேரளாவில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பதை கவனித்து பார்க்க வேண்டியுள்ளது.
ஆனால் இதை பா.ஜனதாவின் வெற்றியாக கருதவில்லை. சுரேஷ் கோபியின் பிரபலத்தால் கிடைத்த வெற்றி. கடந்த 2009-ம் ஆண்டில் என்னை ஆதரித்தவர் சுரேஷ் கோபி. பின்னர் மதசார்பின்மையை விட்டுவிட்டு வேறு திசையில் பயணிக்கக் தொடங்கிவிட்டார். கேரளாவில் 13 சதவீத கட்சியாக இருந்த பா.ஜனதா தற்போது 16 சதவீத கட்சியாக மாறியுள்ளது."
இவ்வாறு சசி தரூர் கூறினார்.