< Back
தேசிய செய்திகள்
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
தேசிய செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

தினத்தந்தி
|
25 July 2023 3:40 AM IST

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மைசூரு:

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கினாலும், போதிய மழை பெய்யவில்லை. இந்த மாத தொடக்கத்தில் சில நாட்கள் பலத்த மழை கொட்டியது. அதன்பிறகு மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை, மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே உள்ள கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.

24 மணி நேரத்தில் 5½ அடி

இதன்காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கே.ஆர்.எஸ். அணைக்கு வருவதால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 97.50 அடி தண்ணீர் இருந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி அணையில் 92 அடி தண்ணீர் இருந்தது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 5½ அடி உயர்ந்துள்ளது.

நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 29,552 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அது இரவு 8 மணி அளவில் வினாடிக்கு 44,436 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5,452 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுெவன உயர்ந்து வருகிறது.

கபினி

இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2,279.30 அடி தண்ணீர் இருந்தது. கபினி அணை நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 21,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீர் இதே அளவு நீடித்தால் இன்னும் சில தினங்களில் கபினி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வினாடிக்கு 15,452 கனஅடி

இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 15,452 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 7,749 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. தற்போது அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் கபிலா ஆற்றிலும், கே.ஆர்.எஸ். அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரிலும் பாய்தோடி டி.நரசிப்புரா பகுதியில் திருமாகூடலு பகுதியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது.

மேலும் செய்திகள்