ஆந்திராவில் மரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் அதிசயம் - வீடியோ வைரல்
|மரத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விசாகப்பட்டினம்,
இயற்கை எப்போதும் மனிதர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த உலகில் ஏராளமான மர்மங்கள் மனிதனை வியக்க வைக்கிறது. இயற்கை ஒவ்வொரு இடத்திலும் அதிசயங்களை மறைத்து வைத்திருக்கிறது. அந்த வகையில்
ஆந்திர மாநிலத்தில் வனப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்து தண்ணீர் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம், கிந்துகுரு வனப் பகுதியில் பாபிகொண்டலு தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இங்கு லாரல் என அழைக்கப்படும் மரத்தின் மரப் பட்டையை வன அதிகாரி ஒருவர் அரிவாளால் வெட்டினார். அப்போது மரத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்தது. மரத்தில் இருந்து சுமார் 20 லிட்டர் தண்ணீர் வெளியேறியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரத்திற்கு இயற்கையாகவே தண்ணீரை தனக்குள் வைக்கும் அமைப்பு இருப்பதை கண்டு வனத்துறை அதிகாரிகள் வியப்படைந்தனர். இருப்பினும் இந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்த மரம் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், மியான்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.