பிரதமர் பதவியேற்பு விழாவில் தென்பட்டது சிறுத்தையா? - டெல்லி போலீசார் விளக்கம்
|பிரதமர் பதவியேற்பு விழாவின்போது சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று ஜனாதிபதி மாளிகைக்குள் சுற்றி வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. அவருடன் கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர் ஆகியோர் பதவியேற்றனர். இந்த விழாவில் 7 அண்டை நாடுகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், என பல்வேறு தரப்பைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் பங்கேற்றனர்.
இந்த விழாவின்போது சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று ஜனாதிபதி மாளிகைக்குள் சுற்றி வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மத்திய மந்திரிகள் பதவியேற்று கொண்டிருந்தபோது, அதன் பின்னணியில் ஒரு விலங்கு நடமாடிக்கொண்டிருந்தது. பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மர்ம விலங்கு எப்படி வந்தது என்றும் அது சிறுத்தையா? இல்லை சாதாரண பூனைதானா? என பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் இதற்கு டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி போலீசார் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியின் வீடியோவில் ஒரு விலங்கு நடமாடும் காட்சியை பகிர்ந்து அது காட்டு விலங்கு என்று சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் காட்டுகின்றன.
இது உண்மையல்ல, கேமராவில் படம்பிடிக்கப்பட்ட விலங்கு ஒரு சாதாரண வீட்டு பூனை. தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளனர்.