நடிகர் தர்ஷனுக்கு காவல் நிலையத்தில் சலுகைகள் வழங்கப்பட்டதா? கர்நாடக உள்துறை மந்திரி விளக்கம்
|நடிகர் தர்ஷனுக்கு காவல் நிலையத்தில் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கர்நாடக உள்துறை மந்திரி ஜி.பரமேஸ்வரா விளக்கமளித்தார்.
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஆபாச குறுந்தகவல், புகைப்படம் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்த நடிகர் தர்ஷன், அடியாட்களை அனுப்பி ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளார். பின்னர் தர்ஷனும், அவரது ஆட்களும் பட்டணகெரேயில் உள்ள கார்கள் நிறுத்தும் ஷெட்டில் ரேணுகாசாமியை அடைத்துவைத்து சித்ரவதை செய்து கொலை செய்ததுடன், உடலை சாக்கடை கால்வாயில் வீசியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 13 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் அன்னபூர்ணேஸ்வரி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் நிலையத்தில் நடிகர் தர்ஷனுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், போலீசார் அவருக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வாங்கி கொடுப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
மேலும் அன்னபூர்ணேஸ்வரி காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் போலீசார் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி பள்ளி வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களையும் செல்ல விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அன்னபூர்ணேஸ்வரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருபவர்களும் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி.பரமேஸ்வரா இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"பொதுமக்களின் நலன் கருதி தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிரியாணி மற்றும் சிறப்பு சலுகைகளை வழங்க காவல்துறையால் முடியாது. அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை, அவ்வாறு செய்யவும் கூடாது.
இருப்பினும் ஊடகங்களில் இதுபோன்ற புகார்களை கேட்டதும், நான் இதுகுறித்து விசாரித்தேன். நடிகர் தர்ஷனுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். பொதுவாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்களோ, அதே போன்றுதான் தர்ஷனும் நடத்தப்படுகிறார். பெங்களூரு போலீஸ் கமிஷனரிடமும் இதுகுறித்து விசாரித்தேன். இதில் கருணை காட்டுவதற்கு எதுவும் இல்லை. காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.