சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை; தார்வார் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
|தார்வாரில் தீபாவளியையொட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர போலீஸ் கமிஷனர் லாபுராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உப்பள்ளி:
தார்வாரில் தீபாவளியையொட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர போலீஸ் கமிஷனர் லாபுராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சூதாட்டம்
தார்வாரில் தீபாவளி தினத்தன்று சூதாட்டம் நடைபெறுவது வழக்கமாகி உள்ளது. அதாவது கோவில்கள், விளையாட்டு மைதானங்கள், சாலையோரம் உள்ள கடைகள் என்று நகரின் பல இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறும். இந்த சூதாட்டத்தால் கடந்த சில ஆண்டுகளாக கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட போலீசார் சூதாட்டத்திற்கு தடை விதித்துள்ளனர். இது குறித்து தார்வார் மாவட்ட போலீஸ் கமிஷனர் லாபுராம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தீபாவளி திருநாள் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இன்றுடன் இந்த தீபாவளி திருநாள் நிறைவு பெறுகிறது.
கமிஷனர் எச்சரிக்கை
இந்த 5 நாட்களில் தார்வார் மாவட்டத்தில் சூதாட்டம் அதிகளவு நடப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் இந்த சூதாட்டத்தால் குற்றச்செயல்களும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் தார்வார் மாவட்டம் முழுவதும் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒலிப்பெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதையும் மீறி யாரேனும் சூதாட்டத்தில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.