< Back
தேசிய செய்திகள்
காதலனுடன் ஆடம்பரமாக வாழ ஆசை... வாடகை வீட்டு உரிமையாளரை கொன்ற இளம்பெண்
தேசிய செய்திகள்

காதலனுடன் ஆடம்பரமாக வாழ ஆசை... வாடகை வீட்டு உரிமையாளரை கொன்ற இளம்பெண்

தினத்தந்தி
|
16 May 2024 4:45 AM IST

பெங்களூருவில் வாடகை வீட்டு உரிமையாளர் கொலையில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா (வயது 36). இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. சிவனபாளையா பகுதியில் குருமூர்த்தி சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 10-ந்தேதி திவ்யாவும், குழந்தையும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் திவ்யாவை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், திவ்யா கொலை வழக்கில், அவரது வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்கு வசித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்விவரம் பின்வருமாறு:-

கைதான இளம்பெண்ணின் பெயர் மோனிகா (வயது 24). இவரது சொந்த ஊர் கோலார் மாவட்டம் ஆகும். பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக மோனிகா வேலை செய்து வருகிறார். மோனிகா ஒரு வாலிபரை காதலித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' வீடியோக்கள் போடுவதில் மோனிகா ஆர்வம் கொண்டவர் ஆவார். அத்துடன் காதலனுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கும் ஆசைப்பட்டுள்ளார்.

இதற்காக பலரிடம் அவர் கடன் வாங்கி இருந்தார். இதற்கிடையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குருமூர்த்தி வீட்டுக்கு மோனிகா வாடகைக்கு வந்துள்ளார். அப்போது தனது காதலனை திவ்யா குடும்பத்தினரிடம் கணவர் என்று கூறி அறிமுகப்படுத்தி உள்ளார். ஆனால் மோனிகா மட்டும் வீட்டில் தனியாக வசித்துள்ளார். காதலன் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இதற்கிடையில், கடனை கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டு மோனிகாவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். அதே நேரத்தில் தனது காதலனுக்கு புதிதாக ஒரு சரக்கு ஆட்டோவும் வாங்கி கொடுக்க மோனிகா திட்டமிட்டுள்ளார். இதற்காக என்ன செய்வது என்று மோனிகா யோசித்துள்ளார். அப்போது திவ்யா நகைகள் அணிந்து கொண்டு சுற்றித்திரிவதை பார்த்துள்ளார்.

இதையடுத்து, அந்த நகைகளுக்காக வீட்டு உரிமையாளரான திவ்யாவை கொலை செய்யவும் மோனிகா முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த 10-ந்தேதி குருமூர்த்தி கடைக்கு சென்ற பின்பும், அவரது தந்தை, தாய் வேலைக்கு சென்ற பின்பு திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை மோனிகா அறிந்தார். பின்னர் திவ்யாவிடம் பேசுவது போல் சென்று, அவரது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் மோனிகாவின் காதலனுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கைதான மோனிகா மீது கெங்கேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காதலனுடன் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு வீட்டின் உரிமையாளரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்