கோலாரில் போட்டியிட சீட் வழங்கவும் காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டுள்ளேன் - சித்தராமையா
|கோலார் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கும்படி காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டுள்ளேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
வருணா தொகுதியில்
களமிறங்கும் சித்தராமையா
கர்நாடக சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோலார் தொகுதியில் போட்டியிட அவர் தீவிரம் காட்டி வந்தார். அங்கு வெற்றி பெற வாய்ப்பில்லை, வருணா தொகுதியே பாதுகாப்பானது என்று ராகுல்காந்தி கூறியதால், கோலாரில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கிய சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிட சம்மதம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கோலாரில் போட்டியிட சீட்...
காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. எந்த பிரச்சினைகளும் இல்லாமலும், ஒருவர் மட்டுமே போட்டியிட தயாராக இருந்த தொகுதிகளுக்கு மட்டும் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 6 தொகுதிகளில் சீட்டுக்காக பலத்த போட்டி இருக்கிறது. அந்த 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. 2-வது பட்டியலில் அந்த 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும்.
வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்தில் கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்களின் கருத்துகளை கேட்பதும் முக்கியமானதாகும். நான் கோலார் மற்றும் வருணா தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடத்திடம் விருப்பம் தெரிவித்து இருந்தேன். முதற்கட்டமாக வருணாவில் போட்டியிடுமாறு கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கோலார் தொகுதியில் போட்டியிடவும் சீட் கொடுக்கும்படி கட்சி மேலிடத்திடன் கேட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.