< Back
தேசிய செய்திகள்
துணை ஜனாதிபதியாக விரும்பினேனா? என்ன ஒரு காமெடி...!! நிதிஷ் குமார்
தேசிய செய்திகள்

துணை ஜனாதிபதியாக விரும்பினேனா? என்ன ஒரு காமெடி...!! நிதிஷ் குமார்

தினத்தந்தி
|
11 Aug 2022 12:31 PM IST

நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியாக விரும்பினார் என்று சுஷில் மோடி கூறியது முற்றிலும் மோசடியானது என பீகார் முதல்-மந்திரி கூறியுள்ளார்.

பாட்னா,



பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் சார்பில் முதல்-மந்திரியாக நிதீஷ் குமார் பதவி வகித்து வந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால் நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவியில் இருந்து நேற்று முன்தினம் விலகினார்.

இந்த நிலையில், பீகார் மாநில முதல்-மந்திரியாக 8-வது முறையாக அவர் நேற்று பதவியேற்று கொண்டார். பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ் குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார்.

இந்நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, நான் துணை ஜனாதிபதியாக விரும்பினேன் என்று ஒருவர் (சுஷில் மோடி) கூறியுள்ளார். என்ன ஒரு காமெடி. எனக்கு அதுபோன்ற விருப்பம் எதுவும் கிடையாது.

அவர்களுடைய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நாங்கள் எப்படி ஆதரவளித்தோம் என்று அவர்கள் மறந்து விட்டனரா? தேர்தல் முடியட்டும் என நாங்கள் காத்திருந்தோம். அதன்பின்பு எங்களது ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது என கூறியுள்ளார்.

அவர்களுக்கு ஒரு பதவி கிடைக்கும் என்றால், என்னை பற்றி எதுவேண்டுமென்றாலும் அவர்கள் பேசி கொள்ளட்டும். விடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான, பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் மோடி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் துணை ஜனாதிபதியாக நிதீஷ் குமார் விரும்பினார்.

அதற்கு சாத்தியம் இருக்கிறதா? என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பா.ஜ.க. மந்திரிகளுக்கு விருப்பங்களை தெரிவித்தனர் என பதிவிட்டார். கடந்த 6-ந்தேதி நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தங்கார் வெற்றி பெற்று நாட்டின் துணை ஜனாதிபதியானார்.

மேலும் செய்திகள்