குரங்கம்மை பாதிப்பு; மத்திய அரசு சார்பில் உயர்மட்ட சீராய்வு கூட்டம்
|குரங்கம்மை பாதிப்பு பற்றி மத்திய அரசு சார்பில் உயர்மட்ட சீராய்வு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறையாமல் நீடித்து வரும் சூழலில் குரங்கம்மை பாதிப்புகளும் பதிவாகி வருகின்றன. முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகம் சென்று கேரளாவுக்கு கடந்த 14ந்தேதி திரும்பிய நபர் ஒருவருக்கு இந்த தொற்று உறுதியானது.
அவரை தொடர்ந்து, கேரளாவின் கண்ணூரில் 2வது நபருக்கு கடந்த 18ந்தேதியும், மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 22ந்தேதி மற்றொருவருக்கும் என கேரளாவில் மொத்தம் 3 பேருக்கு இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் நேற்று அறிவித்துள்ளார். அவர் கூறும்போது, உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாக சர்வதேச அளவில் பரவியுள்ள குரங்கம்மை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார்.
இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குனரகம் இன்று பிற்பகல் கூட்டம் ஒன்றை நடத்துகிறது என தெரிவித்து உள்ளது. டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லியில் தொற்றுக்கு ஆளான அந்த நபர் (வயது 34) லோக்நாயக் மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்துதல் மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று கூறும்போது, டெல்லியில் குரங்கம்மையின் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார். அதனால், யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. நிலைமை கட்டுக்குள்ளேயே உள்ளது என கூறியுள்ளார்.
டெல்லியில் தொற்று பாதித்த நபருக்கு அதனை உறுதி செய்யும் வகையிலான ஆய்வக நடைமுறை புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தில் நடந்து வருகிறது என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அரசு தெரிவித்திருக்கிறது.
இதனை தொடர்ந்து, தொற்றுக்கான காரணம் பற்றி அடையாளம் காணும் பொது சுகாதார முயற்சிகள், தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல், பரிசோதனை முறையில் தொற்று ஏற்பட்டோரை கண்டறிதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.