< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு
தேசிய செய்திகள்

குஜராத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு

தினத்தந்தி
|
5 Dec 2022 12:00 AM GMT

குஜராத்தில் இன்று (திங்கட்கிழமை) 2-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆமதாபாத்,

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. மாநிலத்தின் முக்கியமான ஆமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள், காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், ஆம் ஆத்மி நிர்வாகிகள் என முக்கிய கட்சிகளின் பெரும் தலைவர்கள் மேற்படி தொகுதிகளில் தீவிரமாக வலம் வந்து வாக்கு சேகரித்தனர்.

இந்த சூறாவளி பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.

இதைத்தொடர்ந்து அந்த தொகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தொகுதிகளில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 61 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அந்தவகையில் 285 சுயேச்சைகள் உள்பட 833 பேர் ேபாட்டிக்களத்தில் இருக்கின்றனர்.

தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளிலும் பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. காங்கிரஸ் கட்சி 90 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளன.

பிற கட்சிகளில் முக்கியமாக பாரதிய பழங்குடியினர் கட்சி 12 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 44 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் கணிசமான இடங்களில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தேர்தலில் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் (காட்லோடியா தொகுதி), படேல் இன தலைவர் ஹர்திக் படேல் (விரம்கம்), அல்பேஷ் தகோர் (காந்திநகர் தெற்கு), தலித் பிரிவு தலைவர் ஜிக்னேஷ் மேவானி (வட்காம்), எதிர்க்கட்சித்தலைவர் சுக்ராம் ரத்வா (ஜெட்பூர்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

இதற்கிடையே 2-ம் கட்ட தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வந்தது.

இந்த தொகுதிகளில் வாக்களிக்க தகுந்த வாக்காளர்களாக 2.51 கோடி பேர் அடையாளம் காணப்பட்டு இருந்தனர். இதில் 1.29 கோடி பேர் ஆண்கள், 1.22 கோடி பேர் பெண்கள். 5.96 லட்சம் புதிய வாக்காளர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.

இவர்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்காக மேற்படி தொகுதிகளில் 14,975 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1.13 லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர்.

இவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

2-ம் கட்ட தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்காக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக மாநில போலீசாருடன், துணை ராணுவமும் களமிறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்