மதம், சமூகத்தின் அடிப்படையில் வாக்காளர்களின் பெயர்களை நீக்கவில்லை - கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி
|மதம், சமூகத்தின் அடிப்படையில் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாக கூறுவது உண்மை இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா கூறியுள்ளார்.
பெங்களூரு:
6 லட்சம் பேர் பெயர் நீக்கம்
பெங்களூருவில் 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் பெயர்கள் தான் வாக்காளர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா கூறியதாவது:-
உண்மை இல்லை
பெங்களூருவில் 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கிய விவகாரத்தில் மதம், சமூகத்தின் அடிப்படையிலும் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இது உண்மை இல்லை. வாக்காளர்கள் பட்டியலில் வாக்காளர்களின் மதம், சமூகம் இடம் பெற்றிருக்காது. எனவே மதம், சமூகத்தின் அடிப்படையில் யாருடைய பெயரையும் வாக்காளர்களின் பட்டியலில் இருந்து நீக்க இயலாது. கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் இல்லை.
வாக்காளர்களின் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் காலஅவகாசம் உள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்கவும், திருத்தம் செய்யவும் முடியும். பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். நேரடியாவோ, ஆன்லைன் மூலமாகவும் பெயர்களை சரி பார்க்கலாம், திருத்தம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.