சாதனை அளவை எட்டும் வகையில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி
|நாடு முழுவதும் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.