< Back
தேசிய செய்திகள்
அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவலை தடுக்க மீண்டும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் - அமித்ஷா
தேசிய செய்திகள்

அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவலை தடுக்க மீண்டும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் - அமித்ஷா

தினத்தந்தி
|
16 Sept 2023 11:00 PM IST

அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவலைத் தடுக்க மீண்டும் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.

சந்தர்ப்பவாத கூட்டணி

பீகார் மாநிலத்தில் நேபாளம் மற்றும் வங்காளதேச எல்லையையொட்டி அமைந்துள்ள ஜான்ஜார்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

'பீகார் மாநிலத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வென்ற தேசிய ஜனநாயக கூட்டணி, அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்து 40 தொகுதிகளையும் கைப்பற்றும்.பீகாரில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்துவருகிறது. இங்குள்ள சந்தர்ப்பவாத கூட்டணியால் வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகத்தான் செய்யும்.

பள்ளி விடுமுறைகள் ரத்து

நிதிஷ்குமார்-லாலு பிரசாத் யாதவ் கூட்டணி, எண்ணெய்யும் தண்ணீரும் கலந்தது போன்றது. அது அதிக காலம் நீடிக்காது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்த இந்தக் கூட்டணியினர், அதைத் தடுக்க தங்களால் முடிந்தவரை பாடுபட்டனர். பீகார் ஆளும் கூட்டணி, வாக்கு வங்கி அரசியலால், இந்து மத பண்டிகைகளுக்கான பள்ளி விடுமுறைகளை ரத்து செய்தது. மக்களின் எதிர்ப்பால் அதை திரும்பப் பெற்றுள்ளது.

ஊழலுடன் தொடர்புடையது என்பதால்...

சனாதன தர்மத்தை எதிர்க்கட்சிகள் கூட்டணி இழிவுபடுத்தியுள்ளது. ரூ.12 லட்சம் கோடி ஊழலுடன் தொடர்புடையது என்பதால்தான் அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பதை துறந்து 'இந்தியா' கூட்டணி என்ற பெயரை சூட்டிக்கொண்டுள்ளனர்.

மோடிக்கு வாக்களிக்க வேண்டும்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகாவிட்டால், பீகாரின் சீமாஞ்சல் பகுதி முழுவதும் அண்டை நாட்டவர்கள் ஊடுருவிவிடுவார்கள். எனவே அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவலைத் தடுக்க வாக்காளர்கள் மீண்டும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்.

லாலு பிரசாத் தனது மகனை பீகார் முதல்-மந்திரி ஆக்க விரும்புகிறார். நிதிஷ்குமார் பிரதமர் ஆக ஆசைப்படுகிறார். ஆனால் அவர்களின் கனவுகள் நிறைவேறாது. மோடிதான் அடுத்த ஆண்டு மீண்டும் பிரதமர் ஆவார்.'

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்