< Back
தேசிய செய்திகள்
விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
2 Jun 2024 11:32 AM IST

ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி பிரதமர் மோடி தியானம் செய்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். அங்கு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மாலையில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார்.

தியானத்தின்போது காவி வேட்டி, காவி சட்டை, காவி துண்டுக்கு மாறினார். நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் வைத்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார். பிரதமர் மோடி 3 நாளில் 43 மணி நேர தியானத்தில் இருந்தார்.

3 நாள் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் ரோஜாப்பூ மாலை வைத்து வணங்கினார். அப்போது திருவள்ளுவரின் பாதத்தில் தலையை வைத்து மனமுருகினார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து விமானம் மூலம் டெல்லியை சென்றடைந்தார்.

இந்த நிலையில், 3 நாட்கள் மேற்கொண்ட தியானம் குறித்து விவேகானந்தர் நினைவு பாறை பதிவேட்டில் பிரதமர் மோடி குறிப்பு எழுதியுள்ளார். அதில் "கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும், என் உடலின் ஒவ்வொரு துகளும் தேசத்தின் சேவைக்காக எப்போதும் அர்ப்பணிக்கப்படும் என்று மீண்டும் ஒருமுறை உறுதி அளிக்கிறேன்.

ஆன்மிக மறுமலர்ச்சியின் தூண்டுகோலான விவேகானந்தர் என்னுடைய வழிகாட்டியாகவும் என் தவத்தின் ஆதாரமாகவும் இருந்துள்ளார். சுவாமி விவேகானந்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்திற்கு வந்து தியானம் செய்தபோது, இந்தியாவின் மறுசீரமைப்புக்கு ஒரு புதிய திசையைப் பெற்றார். விவேகானந்தரின் லட்சியங்களைப் பின்பற்றி நமது கனவுகளின் இந்தியா வடிவம் பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்