கொல்கத்தா சென்ற விஸ்தாரா விமானத்தில் என்ஜீன் கோளாறு - டெல்லியில் அவசர தரையிறக்கம்
|கொல்கத்தா சென்ற விஸ்தாரா விமானத்தில் ஏற்பட்ட என்ஜீன் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி,
கொல்கத்தாவுக்குச் சென்று கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் திடீரென ஏற்பட்ட என்ஜீன் கோளாறு காரணமாக அவசரமாக டெல்லி விமானநிலையம் திரும்பியது.
வெள்ளிக்கிழமை மாலை தேசிய தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 160 பயணிகளுடன் UK 707 என்ற விஸ்தாரா விமானம் கொல்கத்தாவுக்கு புறப்பட்டது. கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது விமானம் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக விஸ்தாரா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, "மாற்று விமானம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களும் ஏறியவுடன் விமானம் விரைவில் புறப்படும். வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறினார்.