வைரல் வீடியோ: லிப்டில் வேலைக்கார சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் பெண்
|லிப்ட்டில் வேலைக்கார சிறுமியை எஜமானி செய்த காட்டுமிராண்டித்தன வீடியோவை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்
புதுடெல்லி
புதுடெல்லியின் நொய்டாவில் உயர்மட்ட குடியிருப்பு ஒன்றில் பணிபுரியும் சிறுமி ஒருவர் எஜமானியால் துன்புறுத்தப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
சிறுமியை எஜமானி கழுத்தை இறுக்கி இழுத்து சென்று அடிப்பதைக் காணலாம். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி அனிதா லிப்டை விட்டு வெளியேற முயற்சிக்கிறாள்,வீட்டு எஜமானி ஷெபாலி அவளை வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கிறார். இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. அனிதாவின் உடலில் பல காயங்கள் காணப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி சாத் மியா கான் கூறும்போது, "புகார் அளித்த பெண் ஷெபாலி கவுல் என்ற பெண் தனது மகளை பிணைக் கைதியாக பிடித்து தாக்கியதாக கூறினார். தாயாரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
ஷெபாலி கவுல் என்ற பெண் 24 மணி நேர ஒப்பந்தத்தின் பேரில் 20 வயது சிறுமி அனிதாவை வீட்டு வேலை செய்வதற்காக அழைத்து சென்றார். ஆனால், ஷெபாலி அனிதாவை அடிக்கத் தொடங்கினார், இரவும் பகலும் வீட்டு வேலைகளைச் செய்ய வைத்து, சிறுமியை அடித்து உள்ளார்.
அனிதா வீட்டிற்கு செல்ல முயற்சிக்கும் போதெல்லாம், அவரை அடிப்பார். 6 மாதங்களாக தன்னை பிணைக் கைதியாக வைத்திருந்ததாக அனிதா குற்றம் சாட்டியுள்ளார்.