வித்தியாசமான முறையில் வெண்ணெய் டீ தயாரிக்கும் முதியவர்: தாறுமாறான கருத்துடன் வைரலாகும் வீடியோ
|உணவு தயாரிப்பு தொடர்பான வீடியோக்களை பதிவிடும் பயனர் ஒருவர், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில், மக்களின் இதயங்களில் தேநீர் (டீ) நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது. பரபரப்பான நகரங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மூலையிலும் டீக்கடையை காணலாம். கிராமங்களிலும் டீக்கடைகளுக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு கடையிலும் தயாரிக்கப்படும் டீக்கு ஒரு தனித்துவமான சுவை இருக்கும். சாதா டீ, ஸ்பெஷல் டீ, மசாலா டீ, மூலிகை டீ என வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல சுவைகளில் டீ விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் உணவு வகைகள் தொடர்பான வீடியோக்களை பதிவிடும் பயனர் ஒருவர், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஒரு முதியவர் தெருவோர கடையில் டீ தயாரிப்பது அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த முதியவர் வெண்ணெயுடன் டீ தயாரிக்கிறார். சூடான பாத்திரத்தில் தாராளமாக வெண்ணெயை சேர்த்து உருக்கி, அதைத் தொடர்ந்து பால் மற்றும் ரோஜா இதழ்களைச் சேர்க்கிறார். பின்னர் டீத்தூள், சர்க்கரை மற்றும் பாதாம் ஆகியவற்றை அந்த கலவையுடன் சேர்க்கிறார். நன்றாக கொதித்ததும் டீ தயாராகிறது.
அந்த முதியவரை பேட்டி எடுத்த நபர், நீங்கள் எவ்வளவு காலம் இந்த வகை டீ விற்பனை செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதிலளித்த அந்த முதியவர், 1945இல் எனது தாத்தாவால் தொடங்கப்பட்ட பாரம்பரிய வியாபாரம், என்று பெருமையாக கூறுகிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த பயனர்கள், முதியவர் தயாரித்த டீ குறித்து நேர்மறையான விமர்சனங்களைவிட, எதிர்மறையான விமர்சனங்களையே அதிகம் பகிர்ந்தனர். சிலர் கேலி கிண்டல் செய்து தாறுமாறாக கருத்துகளை பதிவிட்டனர்.
"மாமா டீ விற்கிறார், பரவாயில்லை, ஆனால் அதை யார் வாங்குகிறார்கள்?" ஒரு பயனர் கூறியிருக்கிறார்.
'இதைக் குடித்துவிட்டு ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்' என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
"இதனால்தான் இப்போதெல்லாம் சிறுவயதிலேயே மாரடைப்பு வருகிறது" என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார்.
"இனி தக்காளி மற்றும் வெங்காயம் மட்டும் டீயில் சேர்க்கவேண்டியது பாக்கி" என்று ஒரு பயனர் கேலி செய்தார்.