வி.ஐ.பி. வார்டில் சஞ்சய் ராய்... சி.பி.ஐ. விசாரணையில் உண்மையை கக்கினாரா?
|கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை வழக்கில் சஞ்சய் ராய், கைது செய்யப்பட்ட உடன் போலீசாரிடம் குற்றம் நடந்தது பற்றி ஒப்பு கொண்டார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கொல்கத்தா நகரில் உள்ள பிரெசிடென்சி சிறையில் வி.ஐ.பி. வார்டில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டு உள்ளார். சி.பி.ஐ. அமைப்பினர் இந்த சிறைக்கு சென்று முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையை நேற்று நடத்தினர்.
இந்த சோதனையை சஞ்சய் ராய் மற்றும் மற்றவர்களிடம் இன்று நடத்த முடிவானது. இதன்படி, சிறையில் வி.ஐ.பி. வார்டில் அடைக்கப்பட்ட ராயிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதேபோன்று, சால்ட் லேக் பகுதியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வேறு சிலரிடமும் இந்த சோதனை இன்று நடத்தப்பட்டது.
நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள், வெவ்வேறு உபகரணங்கள் கொண்டு நடந்த இந்த நீண்ட விசாரணைக்கு பின்பு, இன்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் புறப்பட்டனர். இந்த விசாரணையில் என்ன விவரங்கள் எல்லாம் கிடைத்தன என்பது கேள்வியாக உள்ளது.
சஞ்சய் ராய், கைது செய்யப்பட்ட உடன் போலீசாரிடம் குற்றம் நடந்தது பற்றி ஒப்பு கொண்டார். நீங்கள் விரும்பினால் தூக்கில் போடுங்கள் என்றும் அப்போது கூறினார். தயக்கமின்றி பேசினார் என தகவல்கள் வெளிவந்தன.
ஆனால், சி.பி.ஐ. வசம் வழக்கு சென்ற பின்பு, அவர் மாற்றி மாற்றி பேசி வருகிறார் என கூறப்படுகிறது. சி.பி.ஐ. விசாரணையில் ஒரு தெளிவான பதிலை அவர் தெரிவிக்கவில்லை. அவருடைய வாக்குமூலத்தில் தொடர்ச்சியாக முரண்பாடுகளும் காணப்பட்டன.
சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வெவ்வேறு தகவல்களை ஒன்றன்பின் ஒன்றாக கூறி தவறாக வழிநடத்த முயல்கிறார் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் மருத்துவமனைக்குள் நுழைந்ததற்கான காரணம், மருத்துவமனைக்குள் நுழைந்த நேரம், கருத்தரங்கிற்குள் நுழைந்ததற்கான காரணம் மற்றும் படுகொலை உள்ளிட்டவை பற்றி அவர் மாற்றி மாற்றி வாக்குமூலம் அளித்து வருகிறார் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.