காங்கிரஸ் அரசு அறிவித்தப்படி ஜூலை 1-ந்தேதி முதல் 10 கிலோ அரிசி வழங்காவிட்டால் தீவிர போராட்டம்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
|காங்கிரஸ் அரசு அறிவித்தப்படி ஜூலை 1-ந்தேதி முதல் 10 கிலோ அரிசி வழங்காவிட்டால் வீதியில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மத்திய அரசுடன் ஆலோசிக்கவில்லை
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்தால் அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி வழங்குவோம் என்று அறிவித்திருந்தனர். இந்த 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அறிவிக்கும் முன்பாக மத்திய அரசுடன், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஆலோசனை நடத்தவில்லை. தற்போது மத்திய அரசிடம் இருந்து அரிசி கிடைக்காது என்று தெரிந்தும், அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தடுப்பதாக குற்றச்சாட்டு கூறுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர்கள் செய்த தவறை மூடி மறைக்கும் விதமாக மத்திய அரசு மீது பழிபோடும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 1-ந் தேதியில் இருந்தே 10 கிலோ அரிசி பெறுவதற்கு தகுதியானவர்களுக்கு கொடுக்க வேண்டும். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முதல்-மந்திரி சித்தராமையா பேசி இருப்பதை பார்க்கும் போது ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி கொடுக்காமல் மோசம் செய்வதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டு வருகிறது.
அரசியல் செய்கிறார்கள்
ஏழை மக்களை மோசடி செய்வதற்காக இந்த திட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள். மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் 5 கிலோ அரிசியை வழங்கி வருகிறது. தற்போது முதல்-மந்திரி சித்தராமையா ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்குவதாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். உண்மையில் 5 கிலோ அரிசியை பிரதமர் மோடி தான் ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார்.
இதனை மறைத்து விட்டு காங்கிரஸ் அரசும், முதல்-மந்திரி சித்தராமையாவும் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்குவது போன்ற தோற்றத்தை மக்களிடம் உருவாக்க நினைக்கிறார்கள். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிவு செய்தால், 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே கூடுதல் அரிசி வழங்குவதற்காக டெண்டர் விட்டு இருக்கலாம். தற்போது டெண்டர் மூலமாக அரிசி வாங்கி இருக்கலாம்.
தெருவில் இறங்கி போராட்டம்
ஆனால் காங்கிரசாருக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்க மனம் இல்லை. இதன் காரணமாகவே மத்திய அரசு மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். மக்களை திசை திருப்ப பொய் குற்றச்சாட்டுகளையும், காரணங்களையும் சித்தராமையா கூறி வருகிறார். 10 கிலோ அரிசி கொடுக்க முடியாவிட்டால், அதற்கு உரிய பணத்தை ஏழை மக்களின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை காங்கிரஸ் தொடங்க வேண்டும்.
வருகிற ஜூலை முதல் வாரத்தில் இருந்து பி.பி.எல். கார்டு வைத்திருப்பவர்கள், விவசாயிகளுக்கு 10 கிலோ அரிசியை காங்கிரஸ் அரசு வழங்க வேண்டும். காங்கிரஸ் அரசு அறிவித்தப்படி இந்த திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், பா.ஜனதா தெருவில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபடும். காங்கிரஸ் உத்தரவாதம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற நினைக்கிறது. இதனை பா.ஜனதா வேடிக்கை பார்க்காது.
இரட்டை வேடம்
மின்கட்டண உயர்விலும் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. மே 12-ந் தேதி மின் கட்டண உயர்வுக்கு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கேட்டு இருந்தது. ஜூன் 2-ந் தேதி மின் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் 2-ந் தேதி மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது பா.ஜனதா இல்லை, காங்கிரஸ் கட்சி ஆகும்.
காங்கிரஸ் அரசு பொய் பேசுகிறது. காங்கிரஸ் அரசு பொறுப்புடன் நடந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் அரசு கூறியபடி 10 கிலோ அரிசி வழங்காவிட்டால், மக்களுடன் சேர்ந்து பா.ஜனதாவும் தீவிர போராட்டத்தில் ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.