< Back
தேசிய செய்திகள்
வங்கதேசத்தில் வன்முறை; இந்திய மாணவர்கள் ஆயிரம் பேர் நாடு திரும்பினர்
தேசிய செய்திகள்

வங்கதேசத்தில் வன்முறை; இந்திய மாணவர்கள் ஆயிரம் பேர் நாடு திரும்பினர்

தினத்தந்தி
|
20 July 2024 3:36 PM IST

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில் இருந்து சுமார் இந்திய மாணவர்கள் ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.

புதுடெல்லி,

வங்காளதேசத்தில் அரசு வேலையில் தகுதி அடிப்படையில் 44 சதவீதம், விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் அடிப்படையில் 30 சதவீதம், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை சேர்தவர்கள் அடிப்படையில் 10 சதவீதம், பெண்களுக்கு 10 சதவீதம், சிறுபான்மையினருக்கு 5 சதவீதம், மாற்று திறனாளிகளுக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

இந்த இடஒதுக்கீட்டு நடைமுறைக்கு எதிராக அந்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அரசு வேலையில் தியாகிகள் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை 2018-ம் ஆண்டு அந்நாட்டு அரசு ரத்து செய்தது.

இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டாக்கா ஐகோர்ட்டில் 2021-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 1-ந்தேதி தீர்ப்பு வெளியானது.

அந்த தீர்ப்பில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து வங்கதேசத்தின் சில பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது. மாணவர்கள் போராட்டத்தை போலீசார் தடுக்க முயற்சித்தனர். அப்போது, மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடங்கிய போராட்டம் தற்போது ஷேக் ஹசீனா தலைமையிலான வங்காளதேச அரசுக்கு எதிரானதாக மாறியுள்ளது.

வங்கதேசத்தில் சுமார் 15,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 8,500 பேர் மாணவர்கள் ஆவர். இந்நிலையில், அங்கு தற்போது நிலவி வரும் கலவர சூழல் காரணமாக அங்குள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்ப இந்திய தூதரகத்தின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய உயர் தூதரக அதிகாரிகள் வங்கதேசத்தின் சிவில் விமான போக்குவரத்து துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் டாக்கா மற்றும் சிட்டகாங் ஆகிய நகரங்களில் இருந்து இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மேலும் சாலை மார்க்கமாக பயணம் செய்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதோடு நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்தியாவிற்கு வருவதற்கான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வங்கதேசத்தில் உள்ள இந்திய உயர் தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் ஆகியவற்றின் உதவியுடன் சாலை மார்க்கமாக 778 மாணவர்களும், விமானங்கள் மூலம் 200 மாணவர்களும் இந்தியா திரும்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்