விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வன்முறை - கர்நாடகாவில் 144 தடை உத்தரவு
|விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக கொண்டு சென்றபோது வன்முறை வெடித்தது.
பெங்களூரு,
நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். அதேபோல், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் இறுதி நாளில் வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. அதேவேளை, சில பகுதிகளில் விநாயகர் சிலைகள் முன்கூட்டியே கரைக்கப்படுகின்றன.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் படரிகொபலு என்ற கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று இரவு நீர்நிலையில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.
நாகமங்களா என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது. இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் சாலையின் இருபுறமும் இருந்த தள்ளு வண்டி கடைகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி தீவைத்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவத்தை அடுத்து நாகமங்களாவில் உடனடியாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இந்த தடை உத்தரவு அடுத்த 24 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாகமங்களா டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் உயர் போலீஸ் அதிகாரிகள் நாகமங்களாவுக்கு விரைந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த வன்முறை சம்பவம் குறித்து மாண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில் தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளது. போதுமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.