மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை முக்கிய குற்றவாளி கைது...!
|மணிப்பூரில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்து உள்ளது. இந்த வீடியோவை கண்ட மனித உரிமை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனிடையே, இந்த வீடியோவை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கும், சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து மணிப்பூரின் சுராசந்த்பூரில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 32 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளி ஒருவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு உள்ளனர் அவர் பெயர் ஹேராதாஸ் (32) .