< Back
தேசிய செய்திகள்
ஜனநாயகத்தை மீறுபவர்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் போல் நடிக்கிறார்கள் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
தேசிய செய்திகள்

'ஜனநாயகத்தை மீறுபவர்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் போல் நடிக்கிறார்கள்' - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

தினத்தந்தி
|
19 March 2023 10:43 AM IST

நமது ஜனநாயகம் காலத்தின் சோதனையை தாங்கி நிற்கும என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.

திருவனந்தபுரம்,

கேரளாவைச் சேர்ந்த பிரபல நாளிதழின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அம்மாநிலத்தின் முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், அண்மையில் ராகுல் காந்தி லண்டனில் இந்திய ஜனநாயகம் தொடர்பாக பேசிய கருத்தை விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

"நமது மகத்தான நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு எப்போதும் அப்படியே இருக்கும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூறப்படும் சில கருத்துக்கள் எவ்வளவு ஆதாரமற்றதாகவும், நியாயமற்றதாகவும் இருந்தாலும், நமது ஜனநாயகம் காலத்தின் சோதனையை தாங்கி நிற்கும்.

நமது ஜனநாயகத்தையும், நிறுவனங்களையும் தொடர்ந்து பலவீனப்படுத்த முயற்சிப்பவர்களால் 'ஜனநாயகம்' என்ற வார்த்தை ஒரு நவீன விளம்பரத்தைப் போல் பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தை மீறுபவர்கள் இப்போது பாதிக்கப்பட்டவர்கள் போல் நடிக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளைப் போலன்றி, ஜனநாயகம் என்பது இந்தியாவில் செயற்கையாக பொருத்தப்பட்டதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது நமது நாகரிக வரலாற்றின் ஒருங்கிணைந்த மற்றும் அழிக்க முடியாத பகுதியாகும்."

இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இந்திய ஜனநாயக கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்