மண்டியாவில் போராட்டத்தின் போது சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை
|மண்டியாவில் போராட்டத்தின் போது சட்டத்தை மீறினால் நடவடிக்கை கடும் எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்கும்படி உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். மண்டியாவில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்புக்கு பல்வேறு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் மண்டியாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மண்டியா மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆயுதப்படை, அதிவிரைவுப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது. சட்டவிரோதமாக யாராவது செயல்பட்டால் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போராட்டம், முழு அடைப்பு நடத்துவது அவர்களின் உரிமை. போராட்டம் நடத்துவதற்கு எங்களின் ஆட்சேபனை இல்லை. கர்நாடகத்தின் நலனை காக்க கோரி அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம். ஆனால் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க கூடாது. அதுபோல் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து இன்று (நேற்று) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். அவசர சட்டம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம். கே.ஆர்.எஸ். அணையில் நீர் இருப்பு குறைந்துள்ளது. நீர்மட்டம் உயரவில்லை. எங்களிடம் நீர் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளோம். ஆனாலும் நீர் திறக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி பரமேஸ்வர் கூறினார்.