விதியை மீறிய எல்&டி நிதி நிறுவனம் - ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு
|விதிமுறையை மீறியதாக எல்&டி நிதி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
மும்பை,
எல்&டி மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனம் ஆகும். இந்தியாவில் உள்ள பெரிய நிதி நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. இது மக்களுக்கு வீட்டுக்கடன்கள், இரு சக்கர வாகனக் கடன்கள், பண்ணைக்கடன் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனம் மீது விதிகளை மீறியதாக ஒழுங்கு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியதாவது, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் படி எல்&டி நிறுவனத்துக்கு ரூ. 2.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்களுக்கு, அதன் அபாய வரம்பு மற்றும் கடன் விண்ணப்பப் படிவத்தில் வெவ்வேறு வட்டி விகிதங்களை வசூலிப்பதற்கான காரணங்களை வெளிப்படுத்தத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளது.
இந்த விதி மீறல் குறித்து பல்வேறு விசாரணைகள் செய்தும், நிதி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி அதனிடம் இருந்து பெறப்பட்ட விளக்கங்களை ஆராய்ந்தும் பார்த்ததில் நிறுவனம் விதி முறையை மீறியது கண்டறியப்பட்டுள்ளதால் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.