பஞ்சாப் அட்வகேட் ஜெனரலாக வினோத் காய் பதவியேற்பார் - பகவந்த் மான்
|பஞ்சாபின் அடுத்த அட்வகேட் ஜெனரலாக வினோத் காய் நியமிக்கப்படுவார் என பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாபின் அடுத்த அட்வகேட் ஜெனரலாக பிரபல வக்கீல் வினோத் காய் நியமிக்கப்படுவார் என பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் இன்று தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பகவந்த் மான் இதை தெரிவித்துள்ளார். மேலும் வினோத் காய் திறமையான வக்கீல் என்றும் பஞ்சாப் வழக்குகள் சரியாக வாதிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் கூறினார்.
சமீபத்தில் சங்ரூர் எம்.பி சிம்ரஞ்சித் சிங் மான், சுதந்திரப் போராட்ட வீரரான பகத் சிங்கை பயங்கரவாதி என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேட்கப்பட்ட போது, பகத் சிங் தன்னுடைய 23 வது வயதில் நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்தார். பகத் சிங்கின் சிலைகள் இந்தியாவில் மட்டுமில்லாமல் பாகிஸ்தானிலும் உள்ளன. அவர் அங்கும் மதிக்கப்படுகிறார்.
அரசியலமைப்பின் பிரமாணத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரான சிம்ரஞ்சித், அதையே அவமதிக்கிறார் என்று கூறினார். மேலும் பகவந்த் மான், மற்ற மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க விரும்பும் அரசியல் போட்டியாளர்களால் வதந்திகள் பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
வரவிருக்கும் நெல் அறுவடை பருவத்திற்கான புதிய கொள்கைக்கு மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் புதிய கொள்கையின் மூலம் மாபியாக்கள் மூலம் நெல் கடத்தப்படுவது தடுக்கப்படும் என்று கூறினார்.