தொடர் கனமழையால் ெவள்ளத்தில் தத்தளிக்கும் வடகர்நாடக கிராமங்கள்: நிலச்சரிவால் 11 ரெயில்கள் ரத்து
|தொடர் கனமழையால் வடகர்நாடக கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் நிலச்சரிவால் 11 ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா மற்றும் வடகர்நாடக மாவட்டங்களான பெலகாவி, யாதகிரி, ஹாவேரி ஆகிய பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. தலைநகர் பெங்களூருவை பொறுத்தவரை பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் நாள் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. 10 நாட்களுக்கு பிறகு நேற்று பெங்களூரு நகரில் வெயில் அடித்தது.
தென்மேற்கு பருவமழை கடந்த மாதமே தொடங்கினாலும் தற்போது தான் தீவிரமாக பெய்து வருகிறது. பருவமழை தாமதமானதால் மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள காவிரி, கிருஷ்ணா, குமாரதாரா, நேத்ராவதி, காளி, பீமா, துங்கபத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. இதனால் கரையோரத்தில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏராளமான தரைமட்ட பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல கிராமங்களில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த கனமழைக்கு இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குடகில் பெய்து வரும் தொடர் கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. காவிரி ஆறு உற்பத்தியாகும் பாகமண்டலா, தலைக்காவிரி பகுதியில் குடியிருப்பு பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பாகமண்டலாவில் உள்ள பாகண்டேஸ்வரர் கோவிலிலும் படிக்கட்டு வரை தண்ணீர் தேங்கி கிடக்கிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
மடிகேரி-மங்களூரு சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலச்சரிவு சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஆனாலும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் அதிக கனமழை கொட்டி வருகிறது. இதனால் இங்கு ஓடும் குமாரதாரா, நேத்ராவதி ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டி உள்ளன. குமாரதாரா ஆற்றின் நடுவில் இருக்கும் குக்கே சுப்பிரமணியா கோவிலை ெவள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரகன்னடா மற்றும் உடுப்பியிலும் மழையால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கமகளூரு மற்றும் சிவமொக்காவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. சிருங்கேரியில் இருந்து ஆகும்பே வழியாக உடுப்பி செல்லும் சாலையில் உள்ள நேரலகொடிகே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிருங்கேரியில் இருந்து உடுப்பி செல்லும் வாகனங்கள் கொப்பா வழியாக மாற்றுப்பாதையில் செல்கின்றன.
மேலும் சிவமொக்காவில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் ஆகும்பே மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகர்நாடக மாவட்டங்களில் தொடர் கனமழையால் கிருஷ்ணா, பீமா ஆறுகளில் இருக்கரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த ஆறுகளின் படுகையில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. யாதகிரி, குருமித்கல், ஷாகாப்பூர், வடகெரா தாலுகாக்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
பீமா ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையில் உள்ள வீராஞ்சநேயர் கோவில், கனகலேசுவரர் கோவில்கள் முழுவதுமாக மூழ்கி உள்ளன. மேலும் ஏராளமான தரைமட்ட பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதுடன், கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர். அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.
கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வடகர்நாடக மாவட்டங்களில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
பீதர் மாவட்டத்திலும் பருவமழை கோரதாண்டவமாடி வருகிறது. பசவகல்யாண் தாலுகா தன்னூர் கிராமத்தை சேர்ந்த மல்லப்பா (வயது 25) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப்பகுதியில் உள்ள கால்வாயை கடந்து செல்ல முயன்றார். அப்போது தொடர் கனமழை காரணமாக கால்வாயில் அதிகளவு தண்ணீர் வந்ததால் அவர், நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதனால் அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். 3 நாட்கள் ஆகியும் அவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் நேற்று டிரோன் உதவியுடன் மல்லப்பாவின் உடலை தேடும் பணி நடந்தது. ஆனாலும் அவரது உடல் கிடைத்தபாடில்லை.
பெலகாவி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் மல்லப்பிரபா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மல்லப்பிரபா நதி கரையோரத்தில் இருக்கும் கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
கர்நாடகா-மராட்டியம் எல்லையில் உள்ள தூத்சாகர் அருவி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவா-கர்நாடகம் இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவை சரி செய்யும் பணியில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 10 பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ெசயல்பட்டு வருகிறார்கள். இதனால் கடந்த 2 நாட்களாக அந்த வழியாக இயக்கப்படும் 11 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) நிலச்சரிவு சரி செய்யப்பட்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகத்தில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மேலும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் பெங்களூருவை பொறுத்தவரை அடுத்த 3 நாட்கள் மழை பெய்யாது என்றும், வானம் மேக மூட்டத்துடனேயே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.