சிவமொக்காவில் பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
|சிவமொக்காவில் 100 கிராமங்களில் பஸ் சேவை இல்லாததால் அரசின் இலவச பயண திட்டத்தை அனுபவிக்க முடியாமல் தவித்து வரும் மக்கள் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவமொக்கா:-
அரசு பஸ்களில் பெண்கள் பயணம்
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த 11-ந் தேதி அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் தொடங்கியது. பெண்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தாலும், ஒரு சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
அதாவது நகரப்பகுதிகளில் பெண்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தாலும், கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு இந்த திட்டம் எந்த பயனும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு பஸ் போக்குவரத்து சரியாக இல்லை என்பதே ஒரு குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. இந்தநிலையில் சிவமொக்காவில் கிராம மக்கள் மாநில அரசின் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிவமொக்கா மாவட்டம் சாகர், சிகாரிப்புரா, சொரப், தீர்த்தஹள்ளி, ஒசநகர் ஆகிய 5 தாலுகாக்களில் இந்த அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணத்திற்கு வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது.
100 கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை
ஏனென்றால் இந்த தாலுகாக்களில் இருந்து சுற்றுலா தலம் உள்ள உடுப்பி, மங்களூரு உள்பட சில மாவட்டத்திற்கு செல்லவேண்டுமென்றால் அதிகளவு அரசு பஸ்கள் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல இந்த தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 262 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது.
இதில் 100 கிராம பஞ்சாயத்துகளில் ஒரு அரசு பஸ்கள் கூட இயக்கப்படவில்லை. இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த பெண்கள் தனியார் பஸ்களை நம்பியே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
முதலில் அரசு பஸ்சை இயக்கிவிட்டு இலவச பயண திட்டத்தை அறிவித்திருக்கவேண்டும். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லை என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே மாநில அரசு உடனே அந்த கிராமங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது தெரியவில்லை.
கூடுதல் பஸ் வந்தால் இயக்கலாம்
இது குறித்து சிவமொக்கா அரசு போக்குவரத்து கழக அதிகாரி விஜயகுமார் கூறியதாவது:-
சிவமொக்கா நகரப்பகுதிகளில் பெண்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் சில கிராமங்களில் பஸ் வசதி இல்லை என்று கூறுகின்றனர். இதற்கு கொரோனா தொற்றுதான் பெரிய காரணம். அந்த நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.
தற்போது அந்த பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. மேலும் சிவமொக்கா அரசு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் பஸ்கள் வழங்கினால், அனைத்து கிராமங்களுக்கும் இந்த பஸ் சேவை கிடைக்க வழிவகை செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.