< Back
தேசிய செய்திகள்
போலீஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நுழைந்த கிராம தன்னார்வலர்கள் - துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
தேசிய செய்திகள்

போலீஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நுழைந்த கிராம தன்னார்வலர்கள் - துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

தினத்தந்தி
|
14 Feb 2024 3:01 PM IST

தங்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை எடுத்துச் செல்லும் நோக்கில் கிராம தன்னார்வலர்கள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இம்பால்:

மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டம், பெங்கேய் பகுதியில் போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்திற்குள் நேற்று இரவு கிராம தன்னார்வலர்கள் உள்ளிட்ட உள்ளூர் இளைஞர்கள் பலர் நுழைந்தனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

அவர்களை விரட்டியடிப்பதற்காக முதலில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பெரும்பாலானோர் கலைந்து சென்றாலும் சிலர் மேலும் முன்னேறி வந்தனர். எனவே, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 24 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த போலீஸ் பயிற்சி கல்லூரியில் ஏராளமான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தங்களின் பாதுகாப்பிற்காக எடுத்துச் செல்லும் நோக்கில் கிராம தன்னார்வலர்கள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எதிர் தரப்பினரின் தாக்குதலில் இருந்து தங்கள் கிராமத்தை பாதுகாப்பதற்காக அதிக அளவில் ஆயுதங்கள் தேவைப்படுவதாக, கிராம தன்னார்வலர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததால் இந்த சந்தேகம் ஏற்பட்டது. எனினும், அவர்களின் நோக்கம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.

எதிர் தரப்பினரின் தாக்குதல்களை தடுத்து கிராமங்களை பாதுகாக்கும் ஆயுதமேந்திய இளைஞர்களை கிராம தன்னார்வலர்கள் என அழைக்கிறார்கள்.

இம்பால் கிழக்கு மாவட்டத்தின் புகாவ் சாந்திபூர் மற்றும் காங்போக்பி மாவட்டத்தின் காமன்லோக் மலைத்தொடரை ஒட்டிய பகுதிகளில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களுக்கு இடையே நேற்று கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதைத் தொடர்ந்து குராய் மற்றும் குந்த்ரக்பம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இன வன்முறை தொடர்கிறது. பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மெய்தி இன மக்களுக்கும், மலைப்பகுதியை சார்ந்த குக்கி இன மக்களுக்குமிடையே நடக்கும் வன்முறை மற்றும் மோதல்களில் 180க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்